விகாரி வருட புத்தாண்டு பலன்கள் (மேடம் முதல் கன்னி வரை)

Report
824Shares

மேடம்

சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களே!!

உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், சமுதாயத்தில் பிரபலமடையும் வாய்ப்பு ஏற்படும். பணப் பற்றாக்குறை நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த மெல்லிய இடைவெளி மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களைக் குறை கூறும் உறவினர்களை இனம் கண்டு ஒதுங்கிச் செல்வீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் நடைபெறும். சுக்கிரனும் புதனும் சாதகமான வீட்டில் இருப்பதால், சோர்வு நீங்கி மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். பழையக் கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

இந்த வருடம் முழுவதும் ராகு 3-ல் தொடர்வதால், மனவலிமை அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். உங்களிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த நண்பர், உங்களைப் புரிந்துகொண்டு வலிய வந்து பேசுவார்.

சனிபகவான் 9-ல் தொடர்வதால், தன்னம்பிக்கை பிறக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் ஏற்படும். ஆண்டு முழுவதும் கேதுவும் 9-ம் வீட்டிலேயே இருப்பதால், அதிகரிக்கும் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கடந்தகால இழப்புகளை நினைத்து அவ்வப்போது கஷ்டப்படுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். வழக்குகளில் வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

வருடத் தொடக்கம் முதல் 18.5.19 வரை குரு அதிசாரத்தில் 9-ம் வீட்டில் இருப்பதால், எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். 19.5.19 முதல் 27.10.19 வரை குரு 8-ல் அமர்வதால், அடிக்கடி மனக் கவலைகள், பிறரிடம் நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தின் காரணமாக நல்லவர் சிலரின் நட்பை இழக்க நேரிடும். குடும்பத்தில் நிம்மதியற்ற போக்கு காணப்படும். ஆனால், 28.10.19 முதல் 27.3.20 வரை குரு 9-ம் இடத்தில் அமர்வதால், தடைகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். தள்ளிக்கொண்டே போன சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை அமையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

10.9.19 முதல் 4.10.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

28.12.19 முதல் 8.2.20 வரை செவ்வாய் 8-ம் இடத்தில் இருப்பதால், உறவினர்களுடன் மோதல் ஏற்பட்டு நீங்கும். செலவுகளும் பயணங்களும் அதிகரிக்கும்.

மாணவர்கள் சிரத்தை எடுத்துப் படிக்கவேண்டும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். தேங்கிக் கிடக்கும் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆவணி, புரட்டாசி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்துகொண்டாலும், மேலதிகாரி குறைகூறத்தான் செய்வார். வேலைச்சுமை அதிகரிக்கும். ஆவணி மாதத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு மாசி மாதத்தில் புது வேலை கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

கலைஞர்கள் கிடைக்கக்கூடிய சின்னச் சின்ன வாய்ப்புகளையும் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.

இந்தப் புத்தாண்டில் தொடர் முயற்சியின் மூலம் காரியங்களை முடிக்கவேண்டி வரும். இடைவிடாத உழைப்பு மட்டுமே லட்சியத்தை அடையச் செய்யும்.

இடபம்

எல்லோரையும் அன்புடன் நேசிப்பவர்களே!

புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் சுக்கிரன் 10-ம் வீட்டில் வலிமையாக அமர்ந்திருப்பதால், அமைதியாக இருந்து சாதிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். தடைப்பட்டு நிற்கும் காரியங்களெல்லாம் கைகூடும். பழைய கடன் தீரும். வருமானம் உயரும். உங்கள் ராசிக்கு மூன்றாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள். தைரியம் பிறக்கும்.

புதன் லாப வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் ஆண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நிர்வாகத்திறமை அதிகரிக்கும். பெரிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். வருடம் முழுவதும் சனியும் அஷ்டமத்துச் சனியாகத் தொடர்வதால் ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

வருடம் முழுவதும் ராகு உங்கள் ராசிக்கு 2-ல் தொடர்வதாலும், 8-ல் கேது நீடிப்பதாலும் அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிலும் பிடிப்பற்ற போக்கு வந்து செல்லும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது.

வருடத் தொடக்கம் முதல் 18.5.19 வரை குரு அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் மறைந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. திடீர் செலவுகளும் ஏற்படும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள்.

19.5.19 முதல் 27.10.19 வரை குருபகவான் 7-வது வீட்டிலேயே தொடர்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். கணவன் -மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

ஆனால், 28.10.19 முதல் 27.3.20 வரை குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல்,வதந்திகள், இனம்புரியாத கவலைகள், ஒருவித பய உணர்வு வந்து செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்தை சரியாகப் பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும்.

5.10.19 முதல் 28.10.19 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6-வது வீட்டில் சென்று மறைவதால் சிறு சிறு விபத்துகள், வாகனம் பழுதாகுதல், வீடு பராமரிப்புச் செலவுகள் மற்றும் காய்ச்சல், சளி தொந்தரவு வந்து நீங்கும் 9.2.20 முதல் 21.3.20 வரை செவ்வாய் உங்களுடைய ராசிக்கு 8-வது வீட்டில் மறைவதால் வீடு, மனை வாங்குவது விற்பது எதுவாக இருந்தாலும் கவனமாக இருங்கள் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் பெருகும். சோம்பல் நீங்கும். கெட்டப் பழக்கங்கள் விலகும். மதிப்பெண்கள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் நஷ்டப்பட்ட நிலை மாறும். குறைந்த வாடகையில் பெரிய கடை அமையும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் புதிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். ஐப்பசி மாதத்தில் வராது என்றிருந்த பாக்கித் தொகை வந்து சேரும்.

உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மேலதிகாரி உங்கள் திறமையை அங்கீகரிப்பார். பதவி உயர்வுக்காக எழுதும் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வெகுநாள்களாக தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கிடைக்கும்.

கலைஞர்களே! கற்பனைத்திறன் அதிகரிக்கும். அயல்நாட்டு நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும்.

இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் பிரகாசமாக இருக்கும்.

மிதுனம்

சமாதானத்தை விரும்புபவர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் சந்திரன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். முக்கிய பிரமுகர்களை சரியான முறையில் பயன்படுத்தி பல வேலைகளை முடிப்பீர்கள். மற்றவர்களை நம்பாமல் நீங்களே நேரடியாகக் களத்தில் இறங்கி வேலை செய்வீர்கள்.

உங்கள் ராசிக்கு சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் அடுத்தடுத்து முடிப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கோபம் குறையும். பணப்பற்றாக்குறை அகலும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வவளம் பெருகும்.

வருடம் முழுவதும் சனியும், கேதுவும் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே தொடர்வதால் கணவன் – மனைவிக்கிடையே கருத்து மோதல்கள் வரும். சந்தேகத்தால் இருவரும் பிரிய வேண்டி வரும். திடீர் நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வருடம் முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நீடிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். ஆன்மிக விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

வருடத் தொடக்கம் முதல் 18.5.19 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு அதிசாரத்தில் நிற்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்களை பேசித் தீர்ப்பீர்கள். கணவன் – மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும்.

குருபகவான் 19.5.19 முதல் 27.10.19 வரை 6-ம் வீட்டிலேயே மறைவதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டு பேசி தீர்க்கப் பார்க்கவும்.

ஆனால் 28.10.19 முதல் 27.3.20 வரை உங்கள் ராசிக்கு குருபகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் போட்டி, பொறாமைகள் நீங்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். குடும்பத்தில் இனி மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும்29.10.19 முதல் 21.11.19 வரை 6-வது வீட்டில் சுக்கிரன் மறைவதால் கணவன் – மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

22.3.20 முதல் 13.4.20 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்வதால் இந்தக் காலகட்டத்தில் வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.

மாணவர்களுக்கு விளையாட்டில் பதக்கம் கிடைக்கும். உயர்கல்வியிலும் வெற்றியுண்டு.

வியாபாரத்தில் பழைய கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிற்போக்கான நிலை மாறி, முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். வைகாசி, ஆவணி மாதங்களில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

உத்தியோகத்தில் உங்களை ஓரங்கட்ட நினைத்த உயரதிகாரியின் முயற்சியை முறியடிப்பீர்கள். இழந்த சலுகைகளைப் போராடி பெறுவீர்கள். வெகுநாள்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு வைகாசி, கார்த்திகை மாதங்களில் கிடைக்கும்.

கலைஞர்களே! வசதி, வாய்ப்புகள் உயரும். அதே நேரம் வீண் வதந்திகளுக்கும் பஞ்சமிருக்காது.

இந்தப் புத்தாண்டு உங்களைப் பல வகைகளிலும் உயர்த்துவதாக அமையும்.

கடகம்

அதிகாரத்துக்கு அடிபணியாதவர்களே!

செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். புது வேலை கிடைக்கும். பணிகளை முடிப்பதில் இருந்த போராட்டங்கள் விலகி, உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கி, அமைதி நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். மகளின் திருமணத்தை விமரிசையாக நடத்தி முடிப்பீர்கள். ஆனால், உங்கள் ராசியிலேயே இந்த வருடம் பிறப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.

வருடம் முழுவதும் சனியும் கேதுவும் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், செல்வாக்கு உயரும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு, வேற்று மாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வருமானம் உயரும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும்.

வருடம் முழுவதும் ராகு 12-ல் இருப்பதால், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.

குருபகவான் ஆண்டு தொடக்கம் முதல் 18.5.19 வரை உங்கள் ராசிக்கு அதிசாரமாக 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண் டென்ஷன், மனஉளைச்சல், செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். திட்டமிட்ட காரியங்களை சற்று அலைந்து திரிந்தே முடிக்கவேண்டி வரும்.

ஆனால் 19.5.19 முதல் 27.10.19 வரை குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் செல்லும் இடமெல்லாம் செல்வாக்குக் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

ஆனால் 28.10.19 முதல் 27.3.20 வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அலைச்சலும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

22.11.19 முதல் 16.12.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவினருடன் மனக்கசப்பு வரும்.

மாணவர்கள் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். நண்பர்களிடம் பழகுவதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

வியாபாரத்தில் முதலீடுகள் விஷயத்தில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யவும். கூட்டாகத் தொழில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வைகாசி, ஆவணி, தை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். வியாபார விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

உத்தியோகத்தில் நெருக்கடிகளும், பணிச்சுமையும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்கள் திறமையைக் குறைத்து மதிப்பிடுவார்கள். சம்பள உயர்வுக்காகப் போராடுவீர்கள். மார்கழி, தை மாதங்கள் சாதகமாக இருக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கலைஞர்கள் தங்களுடைய தனித் திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். மற்ற கலைஞர்களைப் பற்றி விமர்சனம் செய்யவேண்டாம்.

இந்தப் புத்தாண்டு சில பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், விடாமுயற்சியால் வெற்றி பெற வைப்பதாக இருக்கும்.

சிம்மம்

எதையும் வெளிப்படையாகப் பேசுபவர்களே!

சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்க்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபகாரியங்கள் இனி சிறப்பாக நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால், உங்கள் ராசிக்கு 12-ல் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், செலவுகள் அதிகரிக்கும். சேமிக்க நினைத்தாலும் முடியாது.

1செவ்வாய் 10-ல் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், எதைத் தொட்டாலும் வெற்றியில் முடியும். சவாலான விஷயங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் விவாதங்கள் நீங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புது வேலை கிடைக்கும்.

வருடம் முழுவதும் சனியும் கேதுவும் 5-ல் இருப்பதால், முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், குடும்பச் சூழ்நிலையை அவர்களுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கவும். மகளின் திருமணத்துக்காகக் கடன் வாங்க நேரிடும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் இழுபறியாகி முடியும்.

வருடம் முழுவதும் ராகு லாபவீட்டில் இருப்பதால், ஷேர் மூலம் லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வழக்குகள் சாதகமாக முடியும். ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

வருடத் தொடக்கம் முதல் 18.5.2019 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசாரமாக 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, மனை வாங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஆனால், 19.5.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் ராசிக்கு குருபகவான் 4-ம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்கவும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

ஆனால், 28.10.2019 முதல் 27.3.2020 வரை 5-ம் வீட்டிற்கு குரு செல்வதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் எதிர்பார்த்த நிறுவனத்தில் அமையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

17.12.2019 முதல் 9.1.2020 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள் வந்து போகும். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். கணவன் – மனைவிக்கிடையே ஈகோ பிரச்னையால் சில சங்கடங்கள் ஏற்படும்.

மாணவர்கள் அவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி தொடரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

வியாபாரத்தில் வருடப் பிறப்பின்போது சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். ஆனி, ஆவணி மாதப் பிற்பகுதி, புரட்டாசி, தை, மாசி மற்றும் பங்குனி மாதங்கள் சாதகமாக இருக்கும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால், புகழ் பெற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து அதிக லாபம் சம்பாதிப்பீர்கள்.

உத்தியோகத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.

கலைஞர்களுக்குப் புதுப் புது வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கும்.

இந்த புத்தாண்டு உங்களைச் சாதிக்க வைப்பதுடன், பொருளாதார ரீதியில் வளர்ச்சி தருவதாகவும் அமையும்.

கன்னி

மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர்களே!

உங்கள் ராசிக்கு 11-ல் சந்திரன் இருக்கும்போது தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அடிப்படை வசதிகள் பெருகும். பிரபலங்களின் நட்பும் கிடைக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் விருந்தினர் எண்ணிக்கை அதிகரிக்கும். ராசிநாதன் புதன் ராசியை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்கள் ரசனை மாறும். உறவினர்களால் அனுகூலம் உண்டு.

வருடம் பிறக்கும்போது 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவினருடன் மனக்கசப்பு வரும்.

வருடம் முழுவதும் சனியும், கேதுவும் 4-ம் வீட்டிலேயே நீடிப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். வீட்டிலும் மனைவி, பிள்ளைகளுடன் இருக்கும் நேரம் குறையும். வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. பழைய வாகனத்தை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். தாய்வழி சொத்துகளில் சிக்கல்கள் வரக்கூடும். மறதியால் பணம், விலை உயர்ந்த நகையை இழக்க நேரிடும். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். தேவையற்ற பழக்கங்களைத் தவிர்க்கவும்.

வருடம் முழுவதும் ராகு 10-ல் தொடர்வதால், சிறுசிறு அவமானம், மறைமுக எதிர்ப்புகள், வேலைச்சுமை வந்து செல்லும். தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.

இந்த வருடம் முழுவதும் குருபகவான் சரியில்லாததால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். தோலில் நமைச்சல், நரம்புச் சுளுக்கு வந்து செல்லும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். மற்றவர்களின் ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், பலமுறை யோசித்து ஏற்பது நல்லது. சொத்து வாங்கும்போது ஆவணங்களை கவனமாகப் பரிசீலித்து வாங்கவும். உணவு விஷயத்தில் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

10.1.20 முதல் 3.2.20 வரை உள்ள காலகட்டத்தில் சுக்கிரன் 6-ல் மறைவதால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்படும். நீங்கள் எதைப் பேசினாலும்் அதை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். பண விரயம் உண்டாகும் என்பதால் கவனம் தேவை.

மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதற் காகச் சிரத்தை எடுத்துப் படிப்பீர்கள்.

வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்ட நஷ்டங்கள் நீங்கும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். கடையை நவீனப்படுத்துவீர்கள். தை மாதத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நடைபெறும். பங்குதாரர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள்.

உத்தியோகத்தில் ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மற்றொரு பக்கம் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். வெகுநாள்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். ராகு ராசிக்கு 10-ம் வீட்டில் இருப்பதால் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

கலைஞர்களுக்கு மூத்த கலைஞர்களால் ஆதாயம் உண்டாகும்.

இந்தத் தமிழ்ப் புத்தாண்டு வசதி வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், பதவி, புகழ் போன்றவற்றை வழங்குவதாகவும் அமையும்.

(துலாம் முதல் மீனம் வரை)

31373 total views