விகாரி வருட புத்தாண்டு பலன்கள் (துலாம் முதல் மீனம் வரை)

Report
1845Shares

துலாம்

இனிமையாகப் பேசுபவர்களே!

உங்கள் ராசிக்கு 10-ல் சந்திரன் இருக்கும்போது தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், நிர்வாகத் திறனும் ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். இதுவரை நீங்கள் உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கு புது வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அமையும்.குடும்பத்தில் அடிக்கடி மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.

ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும். ஏமாந்த தொகை இனி கைக்கு வரும். கனிவான பேச்சால் காரியம் முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்து பங்கைக் கேட்டு வாங்குவீர்கள்.

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சனியும், கேதுவும் வருடம் முழுவதும் தொடர்வதால், சோர்ந்து காணப்பட்ட நீங்கள், சோர்வு நீங்கி சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். பெயரும் புகழும் பெற்றுப் பிரபலமடைவீர்கள். நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டிலிருப்பவர்கள், நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்யும் அமைப்பு உண்டாகும்.

வருடம் முழுவதும் ராகுபகவான் ராசிக்கு 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் செலவினங்கள் அதிகரிக்கும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் சிக்கல்கள் வரக்கூடும். ஆரோக்கியத்திலும் கவனம் தேவைப்படும்.வருட ஆரம்பம் முதல் 18.5.19 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசாரமாக 3-ம் வீட்டில் நிற்பதால் கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுபச் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்குத் திருமணம் கூடிவரும். மகனின் போக்கில் நல்ல மாற்றம் தென்படும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

19.5.19 முதல் 27.10.19 வரை குருபகவான் 2-வது வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். ஆனால் 28.10.19 முதல் 27.3.20 வரை குரு 3-ம் வீட்டிற்குச் செல்வதால் காரியத் தடைகள் அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் போராடி முடிக்க வேண்டி வரும். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் ஏற்படக்கூடும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். 16.4.19 முதல் 11.5.19 வரை மற்றும் 4.2.20 முதல் 29.2.20 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

14.4.19 முதல் 6.5.19 வரை செவ்வாய் 8-ல் மறைவதால், உடன்பிறந்தவர்களால் நிம்மதியிழப்பீர்கள். கூடுதல் செலவுகளால் கையிருப்பு கரையும். சொத்துகள் வாங்கும்போது ஆவணங்களை ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்த்து வாங்கவும். மாணவர்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு அமையும். சிலருக்கு வெளிநாட்டில் படிக்க அழைப்பு வரும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யவும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் உறுதியற்ற நிலை உண்டாகும். சிலரால் ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆனால், எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாகும்.

கலைத்துறையினர் மற்றவர்களின் பேச்சை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கவேண்டாம்.

தமிழ்ப் புத்தாண்டு சுமைகளைச் சுமக்க வைத்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்

வேலைகளை உடனுக்குடன் முடிப்பவர்களே!

உங்கள் ராசிக்கு 9-ல் சந்திரன் இருக்கும்போது தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், மற்றவர்கள் செய்ய முடியாத கடினமான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். அடுத்தடுத்து செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும்.

சூரியன் 6-ல் நிற்கும் போது வருடம் பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். வழக்கு வெற்றி அடையும். வேலை கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள்.

வருடம் முழுவதும் பாதச்சனி இருப்பதால் குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் முரட்டுத் தனத்தை அன்பாக எடுத்துச் சொல்லி மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கண், காது வலி வந்து செல்லும். உடம்பில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும்.

வருடம் முழுவதும் கேது 2-லும், ராகு 8-லும் தொடர்வதால், பேச்சில் நிதானம் தேவை. எந்த ஒரு விஷயத்தையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னை வந்து போகும். இரவு நேரத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

வருடத் தொடக்கத்தில் இருந்து 18.5.19 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குரு அதிசாரத்தில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகளும் அடுத்தடுத்து ஏற்படும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்தும் வாய்ப்பு ஏற்படும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

19.5.19 முதல் 27.10.19 வரை குரு ஜன்ம குருவாக இருப்பதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். வீண் பழியும் வந்து நீங்கும்.

28.10.19 முதல் 27.3.20 வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டிலேயே அமர்வதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

7.5.19 முதல் 23.6.19 வரை உங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் 8-ல் மறைவதால் மனஇறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும், எந்தக் காரியத்தை தொட்டாலும் தாமதமாக முடியும் போக்கும் உண்டாகும்.

11.5.19 முதல் 3.6.19 வரை மற்றும் 1.3.20 முதல் 28.3.20 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் அலைச்சல், செலவினங்கள், கணவன் – மனைவிக்கிடையே சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும்.

மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். சிலருக்கு அரசாங்கத்தால் கௌரவிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும்.

வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். உங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு இதுவரை ஏற்பட்ட பல சிக்கல்களும் நீங்கும். பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த தமிழ்ப் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி வைப்பதாக இருக்கும்.

தனுசு

உள்ளதை உள்ளபடி பேசுபவர்களே!

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். மகிழ்ச்சியான செய்திகள் வரும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பிள்ளைகள் கல்வி அல்லது உத்தியோகத்தின் பொருட்டு வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் சந்திரன் இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், எந்த ஒரு வேலையையும் போராடித்தான் முடிக்கவேண்டி வரும். பணம் வரும் என்றாலும் செலவுகளும் அதிகரிக்கவே செய்யும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வருடம் பிறக்கும்போது செவ்வாய் 6-ல் இருப்பதால், தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பிரபலங்களின் உதவியால் சில வேலைகளை முடிப்பீர்கள். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். வெளிநாடு சென்று வருவீர்கள். இழுபறியாக இருந்த பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வருடம் முழுவதும் சனிபகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். ஜன்மச் சனியாக தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வழக்கை நினைத்துக் கவலையடைவீர்கள்.

வருடம் முடியும் வரை 1-ல் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால் முன்கோபம், மனதில் ஒருவித சஞ்சலம், எதிலும் ஆர்வமில்லாத நிலை, ஹார்மோன் பிரச்னை, தலைச்சுற்றல் வந்து செல்லும். கணவன் – மனைவிக்கிடையே வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் கருத்துமோதல்களும் ஏற்படக்கூடும்.

ஆண்டுத் தொடக்கத்திலிருந்து 18.5.19 வரை குருபகவான் அதிசாரமாக ஜன்ம குருவாக நீடிப்பதால், அடுத்தடுத்து வேலைகள் இருந்தபடி இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். 19.5.19 முதல் 27.10.19 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருப்பது அவசியம். கோயில்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

ஆனால், 28.10.19 முதல் 27.3.20 வரை குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் திடீர் பயணங்களால் ஏற்பட்ட வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் குறையும். முன்கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடவேண்டாம். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும்.

24.6.19 முதல் 9.8.19 வரை செவ்வாய் 8-ல் அமர்வதால் கணவன் – மனைவிக்கிடையே மனக்கசப்புகள் வரும். உங்கள் இருவருக்கிடையே வீண் சந்தேகத்தை ஏற்படுத்திப் பிரிவை உண்டாக்கச் சிலர் முயற்சி செய்வார்கள். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள்.

4.6.19 முதல் 5.7.19 வரை மற்றும் 29.3.20 முதல் 13.4.20 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். மற்றவர்கள் விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு விளையாட்டு மனப்பான்மை நீங்கி, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும்.

உத்தியோகத்தில் நல்ல திருப்பம் ஏற்படும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். வைகாசி மாதத்தில் புதிய வேலை கிடைக்கும்.

கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்பு வரும். வருமானம் உயரவும் வழி பிறக்கும்.

இந்தப் புத்தாண்டு ஓய்வில்லாமல் உழைக்க வைத்தாலும், தடைப்பட்ட காரியங்களை நிறைவேற்ற உதவி செய்வதாக இருக்கும்.

மகரம்

இரக்க சுபாவம் கொண்டவர்களே!

ராசிக்கு 2-ல் சுக்கிரன் இருக்கும் வேளையில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், போராடி வெற்றி பெறுவீர்கள். சாதுர்யமாகவும், சமயோசிதமாகவும் சிந்தித்து பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வி.ஐ.பி.கள் உதவுவார்கள். திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

வருடம் முழுவதும் சனி 12- ல் மறைந்து விரயச் சனியாகத் தொடர்வதாலும், கேதுவும் 12-ம் வீட்டில் நிற்பதாலும் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். உறவினர்களுடன் பனிப்போர் வெடிக்கும். மற்றவர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்காமல் நீங்களும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்து முடிவு எடுக்கவும்.

ராகு வருடம் முழுவதும் 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமாவீர்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். ஆன்மிக வழிபாட்டில் மனம் லயிக்கும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

14.4.19 முதல் 18.5.19 வரை குரு உங்கள் ராசிக்கு அதிசாரமாக 12-ம் வீட்டில் இருப்பதால் சின்னச் சின்ன செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக கடன் வாங்க வேண்டியிருக்கும். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடியும்.

குருபகவான் 19.5.19 முதல் 27.10.19 வரை லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். எங்கு சென்றாலும் வரவேற்பு அதிகரிக்கும்.

28.10.19 முதல் 27.3.20 வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். சேமிக்க முடியாதபடி செலவுகளும் அதிகரிக்கும். கடன் கொடுப்பது வாங்குவதில் கவனம் தேவை. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக் கொள்வது நல்லது. தந்தையாரின் உடல் நலனில் கவனம் தேவை.

6.7.19 முதல் 23.7.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

10.8.19 முதல் 25.9.19 வரை செவ்வாய் 8-ல் மறைவதனால் மனஇறுக்கமும், எதிர்காலம் பற்றிய பயமும், எந்தக் காரியத்தை எடுத்தாலும் தாமதமாக முடியும் நிலையும் உண்டாகும்.

மாணவர்கள் உயர்கல்வியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேருவீர்கள்.

வியாபாரத்தில் உங்கள் அனுபவ அறிவு பளிச்சிடும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் நழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைக்கு வரும். கார்த்திகை, மாசி மாதங்களில் பிரபல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு லாபத்தை அதிகரிப்பீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைப்பட்டாலும் போராடிப் பெற்றுவிடுவீர்கள். சில நேரங்களில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்களே பார்க்கவேண்டி வரும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களில் மாற்றம் ஏற்படும். அயல்நாட்டு நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கும். உங்கள் மேல் தொடரப்பட்ட வழக்கு சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு அவர்களுடைய படைப்புகளில் மற்றவர்களால் ஏற்பட்ட சட்டச் சிக்கல்கள் தீரும். வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி அமையும்.

இந்தப் புத்தாண்டு உங்களை வெற்றி பெற வைப்பதுடன், வருமானத்தையும் உயர்த்துவதாக அமையும்.

கும்பம்

உதவும் மனப்பான்மை உள்ளவர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் சந்திரனும் 3-ல் சூரியனும் இருக்கும் வேளையில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வழக்கு சாதகமாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

சுக்கிரன் ராசியில் இருக்கும்போது வருடம் பிறப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவசிய செலவுகளைக் குறைப்பீர்கள். பிள்ளைகளை நல்ல வழிக்குக் கொண்டு வருவீர்கள்.

வருடம் முழுவதும் ராகு 5-ல் தொடர்வதால், சில நேரங்களில் மன இறுக்கம் வந்து நீங்கும். உறவினர்களில் சிலர் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். அன்புத் தொல்லையும் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை. மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகத்துக்காகச் சிலரின் சிபாரிசை நாடுவீர்கள்.

வருடம் முழுவதும் சனியும் கேதுவும் 11-ல் அமர்ந்திருப்பதால், சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது மனதை வாட்டும்.

14.4.19 முதல் 18.5.19 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசாரமாக லாப வீட்டில் வலுவாக இருப்பதால், திடீர் பணவரவு உண்டு. பெரிய பதவிகள் தேடி வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தாழ்வுமனப்பான்மை நீங்கி நேர்மறை எண்ணங்கள் உருவாகும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிக்க வழி பிறக்கும்.

19.5.19 முதல் 27.10.19 வரை குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால், வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்களும் ஏற்படக்கூடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.

28.10.19 முதல் 27.3.20 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். நல்லவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். கணவன்-மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

24.7.19 முதல் 16.8.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

26.9.19 முதல் 11.11.19 வரை உள்ள காலகட்டத்தில் செவ்வாய் 8-ல் மறைவதால் கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்பட்டபடி இருக்கும். ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்ல பலனைத் தரும். விரும்பும் பாடப்பிரிவில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். கார்த்திகை, தை, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். ஆவணி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.

கலைத்துறையினர் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.

இந்தப் புத்தாண்டு சின்னச் சின்ன இடையூறுகளை ஏற்படுத்தினாலும், மனதைப் பக்குவப்படுத்தி, வருட முடிவில் வசதிகளை ஏற்படுத்துவதாக அமையும்.

மீனம்

மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்பவர்களே!

செவ்வாய் 3-ல் வலுவாக இருக்கும் வேளையில் புத்தாண்டு பிறப்பதால், புதிய முயற்சிகள் வெற்றி பெறும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொந்தங்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள்.

வருடம் முழுவதும் சனி பகவான் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வேற்று இனத்தவர்கள் உதவுவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமை இருந்தபடி இருக்கும்.

வருடம் முழுவதும் ராகு 4-லும் கேது 10-லும் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம், முடிவு எடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்தைப் பெறுவதில் பிரச்னைகள் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.

14.4.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் தொடர்வதால் அதுவரை வேலைச்சுமை அதிகமாக இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும்.

19.5.19 முதல் 27.10.19 வரை ராசிநாதன் குருபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி, கிரகபிரவேசம் செய்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

28.10.19 முதல் 27.3.20 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் இருப்பதால் சிறு சிறு அவமானங்களும், விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் குற்றம், குறைகளை அடிக்கடி சொல்லிக் காட்டவேண்டாம். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

17.8.19 முதல் 9.9.19 வரை சுக்கிரன் 6-ல் அமர்வதால், அந்தக் காலகட்டத்தில் கணவன் – மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணைக்குச் சிறு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புள்ளது. 12.11.19 முதல் 27.12.19 வரை செவ்வாய் 8-ல் அமர்வதால் சகோதரர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். செலவுகள் அதிகரிக்கும்.

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் உண்டாகும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று பெற்றோரை மகிழ்விப்பீர்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

வியாபாரத்தில் நீங்கள் தொட்டது துலங்கும் காலம் இது. உங்கள் நிலை உயரும். இழந்த செல்வாக்கை மீட்பீர்கள். தேங்கிக் கிடக்கும் சரக்குகள் விற்றுத் தீரும். பழைய பாக்கிகள் வசூலாகும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். சித்திரை, ஆவணி, தை மாதங்களில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும். புதிதாகப் பொறுப்பேற்கும் உயரதிகாரி உங்களைப் புரிந்துகொள்வார். முக்கியப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார். ஆவணி, புரட்டாசி, தை மாதங்களில் பொறுப்புகள் அதிகரிப்பதுடன், சம்பளமும் உயரும்.

கலைஞர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமடைவீர்கள்.

இந்தப் புத்தாண்டு உங்களை மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வதுடன் உறவினர்கள் வியந்து மதிக்கும்படி வாழவைக்கும்.

விகாரி வருட புத்தாண்டு பலன்கள் (மேடம் முதல் கன்னி வரை)

59523 total views