MailPrint
மதராசபட்டினம்
[ Friday, 09 July 2010, 04:35.49 PM GMT +05:30 ]
இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு நடக்கும் கதை. வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருகிறாள் கதாநாயகி, மதராசப்பட்டினத்தில் துணி வெளுக்கும் மக்களில் ஒருவனான கதாநாயகன் மேல் அவளுக்கு காதல் வருகிறது.

இதற்கிடையில் ஒரு வெள்ளைக்கார தளபதிக்கு அவளை நிச்சயம் செய்கிறார்கள். 1947ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட, வெள்ளைக்காரர்களுடன் கதாநாயகியும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை. இவற்றுக்கிடையில் காதாநாயகனுடன் அவள் சேர்கிறாளா என்பதை இல்லையா என்பதை சொல்லி முடிக்கிறார்கள்.

கதாநாயகனாக ஆர்யா, ஒரு வீரமிக்க இளைஞனுக்கான அத்தனை குணங்களும் தகுதிகளும் அமையப் பெற்றவராய் வருகிறார். மல்யுத்தம் பழகும் காட்சிகளில், வெள்ளைக்கார தளபதியுடன் மோதும் போதும், தனது காதலியை காப்பாற்றி அழைத்துக் கொண்டு ஓடும் காட்சிகள் என இவர் நடிப்பில் அபாரமாக கலக்கியிருக்கிறார். இவருக்கு இணையாக கதாநாயகியும் நடிப்பில் தூள் பண்ணுகிறார். அட எங்கய்யா பிடிச்சாங்க இந்தப் பொண்ண...? தமிழ் தெரியாத பெண்ணாக இவர் வரும் காட்சிகளில் எல்லாம் கண்களால் பேசியே பல அர்த்தங்களைப் புரிய வைக்கிறார். ஆர்யாவிடம் இவர் பேசுவதற்காக தமிழ் புத்தகங்களை படிப்பதும், இந்தியக் கொடியை இவர் கோட்டில் குத்திய ஒருவர் இவர் வெள்ளைக்கார பொண்ணு என்பதைத் தெரிந்து அதை எடுக்க முயற்சிக்கும் போது தடுப்பது, கடைசி காட்சியில் படகில் இருந்து டயர் டியூபை ஆர்யாவின் மேல் போட்டு, ஆற்றுக்குள் தள்ளிவிட ஆர்யா படகை கையால் பிடித்திருக்கும் போது கம்பால் அவர் கையை அடிக்கும் காட்சிகள் என இவர் வரும் காட்சிகளில் எல்லாம் எழுந்து நின்று கைத்தட்ட வைக்கிறார். ரியலி கிரேட்மா... நடிக்க தெரியாத நடிகைகள் இவரிடம் கொஞ்சம் பாடம் கத்துக்கிட்ட தேவலை. வெள்ளைக்கார தளபதியாக வருபவரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

மொழி பெயர்ப்பாளராக வரும் ஹனீபா போட்டோ எடுக்கும் போதெல்லாம் விறைப்பாக நின்று போஸ் கொடுப்பது என்று ஆங்காங்கே அதிகமாகவே சிரிக்க வைக்கிறார். ஆர்யாவின் நண்பர்கள் டீம் கதாநாயகியிடம் தேங்க்ஸ் சொல்லப் போகும் காட்சிகள், ஆர்யா காதலிக்காக ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் காட்சிகள் என சிரிக்க வைக்கும் காட்சிகள் ஏராளம்.

‘கிரீடம்’ படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்கியிருக்கும் படம் இது. பீரியட் பிலிம் எடுக்கிறது என்பது கொஞ்சம் ரிஸ்கான வேலைதான். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யணும். நெறைய மெனக்கெடணும். ஏதாவது ஒரு சீன் சொதப்பிருச்சுன்னாலும் போச்சு... கயிற்றின் மேல் நடக்கும் வேலையை செய்திருக்கிறார் விஜய். ‘பீரியட் பிலிம்னா அது ஆங்கிலப் படங்கள் மட்டும்தானா? ஆங்கில படம் இயக்குபவர்களால் மட்டும்தான் அப்படி படம் எடுக்க முடியுமா என்ன? அட எங்களாலயும் முடியும்ல...’ என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் விஜய். ஜி.வி.பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்கள் இதம்.

கலை செல்வகுமார். சென்னையை மதராசப்பட்டினமாகக் காட்டுவது என்றால் அது என்ன சின்ன வேலையா. 1945ன் சாலைகள், ரயில் நிலையம், ஸ்பென்சர் பிளாசா, கடற்கலை, கூவம் நதி என எப்படி பார்த்து பார்த்து உருவாக்கினார்களோ? அட ரொம்பவே ஆச்சரியமான விஷயம்தான். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவில் மதராசபட்டினம் என்னமாய் அழகாக இருக்கிறது. எடிட்டிங் ஆன்டனி. சாதாரணமாகவே இவர் கை பட்டாலே படம் ஜெட் வேகத்தில் நகரும். இந்தப் படத்திலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. பாடல், சண்டைக்காட்சிகளில் பல எஃபெக்ட்களைப் போட்டுக் காட்டுபவர். அதற்கெல்லாம் இந்தப் படத்தில் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருக்கிறார். காரணம் அந்த எஃபெக்ட்களுக்கு இங்கு வேலையில்லை. ஆனாலும் கலர் கரெக்க்ஷன் பீரியட் பிலிம்ஸ் உருவாக்கத்தில் உறுதுணையாக இருந்திருக்கிறது.