[ Saturday, 15 August 2009, 02:43.11 PM GMT +05:30 ]
மரத்தைச் சுற்றி டூயட் பாடும் நடிகைகளிடமிருந்து ரொம்பவே வித்தியாசமானவர் பத்மப்ரியா. கதைக்கும், கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே இவரது கால்ஷீட் கிடைக்கும்.
ஒட்டுமொத்த நடிகைகளும் பொறாமைப்படக் கூடிய விதத்தில் இவர் நடித்திருக்கும் படம் சேரனின் பொக்கிஷம். ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கும் மகிழ்ச்சி பத்மப்ரியாவின் முகத்தில்.
பொக்கிஷம் படத்தில் உங்க கதாபாத்திரம் என்ன?
"நதீராங்கிற முஸ்லீம் பெண் வேடம். சேரன் இந்த கதையை சொன்ன போதே இந்த கதாபாத்திரம் எனக்கு திருப்புமுனையா இருக்கும்ங்கிற நம்பிக்கை வந்திடுச்சி."
படத்தின் கதை என்ன?
“இதுவொரு பீரியட் படம்கிறதால வழக்கமான படங்கள்ல இருக்கிற எதுவும் இதில் கிடையாது. எழுபதுகளில் நடக்கிற காதல் கதையிது. கொல்கத்தாவில் வேலை பார்க்கிற சேரனுக்கும், நாகூர்ல இருக்கிற எனக்கும் ஒரு சந்திப்புல காதல் வருது. இன்டர்நெட், இ-மெயில் மாதிரியான விஷயங்கள் இல்லாத காலகட்டம்ங்கிறதால கடிதங்கள் மட்டும்தான் எங்களுக்கு ஒரே ஆறுதலா இருக்கு. நான் எழுதுற காதல் கடிதங்களை வச்சுதான் படத்தோட கதையே நகரும். காதல் கைகூடுற நேரத்தில் எதிர்பாராத ஒரு பிரச்சனை வருது.”
மதப் பிரச்சனையா...?
“பிரச்சனைன்னு சொன்னதும் எல்லோரும் மதப் பிரச்சனைன்னுதான் நினைப்பாங்க. ஆனா, மதப் பிரச்சனை கிடையாது. படத்தோட கிளைமாக்ஸ் யாராலும் யூகிக்க முடியாததா இருக்கும்.”
நதீரா கதாபாத்திரத்துக்காக நிறைய ஹோம்வொர்க் செய்ததா சொல்றாங்களே?
“சேரன் கதையை சொன்னபோதே இந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் தெரிஞ்சிடுச்சி. ஆர்த்தடைஸ் முஸ்லீம் பெண்ணோட வாழ்க்கை எப்படியிருக்கும், எப்படி தொழுகை பண்ணுவாங்கங்கிற டீட்டெய்ல்ஸ் தெரிஞ்சுக்கிறதுக்காக ஒரு மாசம் நாகூர்ல தங்கியிருந்து ஸ்டடி பண்ணுனேன். படத்துல வர்ற என்னோட காஸ்ட்யூம் எல்லாமே நானே வாங்கினேன்.”
படத்தில் மேக்கப் இல்லாம நடிச்சிருக்கீங்களாமே?
“சில காட்சிகளில் மேக்கப் இல்லாம நடிச்சிருக்கேன். அந்த காட்சிகளிலும் என்னை பிரமாதமாக காட்டியிருக்கிறார் கேமராமேன், ராஜேஷ் யாதவ்.”
நீங்களும் இந்திக்குப் போயிட்டீங்க. இனி தமிழ்ப் படங்களில் உங்களை பார்க்க முடியுமா?
“நான் நடிச்ச முதல் இந்திப் படம் ஸ்ட்ரைக்கர் முடிஞ்சிடுச்சி. இந்திக்குப் போனதால் தமிழ்ல நடிக்க மாட்டேன்னு யார் சொன்னது. தமிழில் தொடர்ந்து நடிப்பேன். இப்போதும் சிம்புதேவனின் இரும்புகோட்டை முரட்டு சிங்கத்தில் நடிச்சிகிட்டுதான் இருக்கேன்.”