MailPrint
சிங்கம்
[ Saturday, 29 May 2010, 01:11.38 PM GMT +05:30 ]
தூத்துக்குடியை அடுத்து உள்ள தனது சொந்த ஊரிலேயே சப் இன்ஸ்பெக்டராக போஸ்டிங் வாங்கிக் கொண்டு வந்து அதிரடியாகக் உள்ளூரில் கலக்கிக் கொண்டிருக்கும் துரைசிங்கம்.

சென்னையில் ஆள் கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் மயில்வாகனம். கேஸ் விஷயமாக கையெழுத்துப் போட மயில்வாகனத்துக்கு கோர்ட் உத்தரவிட அதற்கு அவர் போகாமல் வேறு ஆளை அனுப்பி வைக்க, அங்கிருந்து ஆரம்பிக்கிறது இருவருக்குமான பிரச்சனை. அதன் பிறகு அடுத்தடுத்து அவர் தரும் பிரச்சனைகளை சமாளித்து எப்படி எதிர்கொள்கிறார் துரைசிங்கம் என்பது கதை.

ஹாட்ரிக் வெற்றியான சாமி படத்தின் இயக்குநர் ஹரி இயக்கியிருக்கும் படம். படம் துவங்கிய முதல் காட்சியிலேயே திரைக்கதையில்பட்டாசைக் கொழுத்திப் போடுகிறார். அது சரவெடியாக படம் முழுக்க முழுக்க வெடித்துக் கொண்டே இருக்கிறது. சூர்யாவின் அறிமுக காட்சியில் முன் சீட்டுக்கு வரும் ரசிகன் அதன் பிறகு இடைவேளையில்தான் கொஞ்சம் ரிலாக்சாக உட்காருகிறான். அதன் பிறகு மீண்டும் அதே பரபரப்பு படம் முடியும் வரை. இப்படி ஒரு திரைக்கதை உருவாக்கவே அபார திறமை இருக்கவேண்டும். ஒரு காட்சியில் இருந்து மற்றொரு காட்சியை யூகிக்கவோ எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு திரைக்கதை காட்சிகளில் என்ன ஒரு வேகம். ஜெட் வேகத்தில் பயணிக்கும் திரைக்கதையால் படம் முழுவதும் விறுவிறுப்பாக போகிறது.

விசில் பறக்கும் காட்சிகள் எக்கச்சக்கம். போலீஸ் டிரஸ்ஸை கழற்றி வெச்சுட்டு வா... என்று வில்லன் ஒருவன் சொல்ல சூர்யா தொப்பியையும், டிரஸ்ஸையும் கழற்றி வைத்துவிட்டு போய் சண்டை போடும் காட்சி, போலீஸ் ஸ்டேசன் வர்றவங்களை கை கொடுங்க கட்டிப் பிடிங்க என்று சொல்லும் காட்சிகள், போலீஸ் ஸ்டேசனில் பிரகாஷ்ராஜ் பேசும், ‘அவனை இவன் டெவலப் பண்றான்... இவனை அவன் டெவலப் பண்றான்... என்னடா நடக்குது இங்க...’ சூர்யாவை தேடி வரும் ரவுடிகளை அவர்கள் காரோடு க்ரேனில் தூக்குவது.. என்று படம் முழுக்க இன்ட்ரஸ்ட்டிங்காக ரசிக்கும்படியான விறுவிறு காட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

துரைசிங்கமாக சூர்யா. காக்க காக்கக்குப் பிறகு சூர்யாவுக்கு போலீஸ் கேரக்டர். கம்பீரமான போலீஸ் கதாபாத்திரத்துக்கு ரொம்பவே பொருந்துகிறார். சண்டைக்காட்சிகள், அனுஷ்காவுடன் காதல், வீட்டிற்கு நல்ல பையனாக என இவர் நடிப்புக்குத் தீனி போடுகிற மாதிரியான ஒரு கேரக்டர். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா. கொஞ்சம் நடிக்கவும் வருகிறது. டூயட் பாடல்களில் என்னமா ஆட்டம் போடுகிறார்... இவருக்கு தங்கையாக வரும் சன் மியூசிக் தொகுப்பாளர் அவரைப் பார்க்க கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவரைப் போல் தெரிகிறது. அவரைப் போய் பள்ளி மாணவி கேரக்டரில் காட்டியிருப்பது கொஞ்சம் கூட பொருத்தமில்லை. அனுஷ்காவும் இவரும் டிசர்ட் போட்டுக் கொண்டு நடந்து வரும் காட்சியில் இவரது தொப்பை அதிகமாக எக்ஸ்போஸ் ஆகி அந்தக் காட்சியே அசிங்கமாகத் தெரிகிறது. எப்படி விட்டுவைத்தார்கள் இந்தக் காட்சியை என்றுத் தெரியவில்லை. அனுஷ்காவின் அப்பாவாக நாசர். சூர்யாவின் அப்பாவாக ராதாரவி. பெரிய வெயிட்டான ரோல் இல்லையென்றாலும் நச்சுன்னு பேர் சொல்ற கேரக்டர்.

விவேக் காமெடியில் பல இடங்களில் தியேட்டரில் விழுந்தடித்துக் கொண்டு சிரிக்கும்படியான காட்சிகள். இவர் வந்தாலே ஒலிக்கும் பின்னணி பாடல், நிலப்பிரச்சனையில் சூர்யாவைப் போல் விவேக்கும் டீல் பண்ணுவது, தெருவில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே வலம் வருவது என குலுங்க குலுங்க சிரிக்க வைக்க ஏராளமான காமெடிகள்.

வில்லன் மயில்வாகனமாக பிரகாஷ்ராஜ். இவரும் சூர்யாவும் சந்திக்கும் காட்சிகள் எல்லாமே பரபரப்பான காட்சிகள். நடிப்பில் தூள் பண்ணியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். ஒரு ஆக்ரோஷமான வில்லனாக இவரைப் பார்க்கலாம். இதுவே ப்ளஸ்ஸாக அமைந்துவிடுகிறது. படத்தின் விறுவிறுப்புக்கு இயக்குநரின் சுறுசுறுப்புக்கு ஏற்ற மாதிரியே வி.டி.விஜயனின் எடிட்டிங்கும் அமைந்திருக்கிறது. பரபரப்புக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார் எடிட்டர். ப்ரியனின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. பரபரப்பான திரைக்கதைக்கு ஆங்காங்கே ப்ரேக் போடுவது போல் அமைந்திருக்கின்றன பாடல்கள். பாடல்கள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் ரீலிஸ் செய்திருக்கிறார்கள்.