MailPrint
கனகவேல் காக்க
[ Monday, 24 May 2010, 01:04.49 PM GMT +05:30 ]
கோர்ட்டில் தவாலியாக வேலை பார்ப்பவர் கரண். பணத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பவர்களை ஒவ்வொருவராகப் போட்டுத் தள்ளுகிறார்.

இதற்கிடையில் இவரை சந்திக்கும் ஹரிப்ரியாவுக்கு இவர் மீது காதல். கொலை செய்பவன் தன் காதலன் என்பது தெரிந்து அதிர்ச்சியடையும் அவரிடம் தான் அப்படி மாறியதற்கான காரணத்தைச் சொல்கிறார் கரண். ப்ளாஷ்பேக்கில், வில்லன் கோட்டா சீனிவாசராவ் கரண் தன் அம்மாவையும் தங்கைகளையும் இழக்க காரணமாக இருக்கிறார். கடைசியில் வில்லனை கொல்ல முயற்சிக்கும் கரண் போலீசில் மாட்டிக் கொள்ள வில்லனை எதிர்கொண்டாரா என்பது க்ளைமாக்ஸ்.

கரண் நன்றாகவே நடிப்பதற்கு ஏராளமான காட்சிகள். ஒன்றை கூட விட்டுவைக்காமல் நன்றாகவே ஸ்கோர் பண்ணியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் ஹரிப்ரியாவுக்கு துடுக்குத்தனம் கலந்த கேரக்டர். கரணை விரட்டி விரட்டிக் காதலிப்பதே இவரது வேலையாக இருக்கிறது. கதாநாயகி அறிமுக காட்சியில் பாட்டைப் போடுகிறார்கள். அட இந்த பழைய ட்ரண்ட்ல இருந்து மாறுங்கப்பா... வில்லன் கோட்டா சீனிவாசராவ் நிறைய பேசுகிறார். சில சமயங்களில் கத்துகிறார். அவரது மகனாக நடித்திருக்கிறார் சம்பத். ஒரே ஒரு காட்சியில் வந்து நம்மை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார் சிங்கமுத்து. ஹாட்டான டாபிக் என்பதால் காமெடி தேவையில்லை என்று இயக்குநர் முடிவு செய்துவிட்டார் போலும். விஜய் ஆன்டனி இசையில் பாடல்கள் இரைச்சல்.

படத்தை இயக்கியிருப்பவர் கவின்பாலா. கோர்ட்டில் குற்றவாளிகள் தப்பித்துவிடுவதை மையமாக வைத்து இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார். சமூக அக்கறையுடன் கூடிய இந்தியன், ரமணா பட வரிசையிலான கதை. ஆனால் திரைக்கதை... காட்சிகள்... ம்கூம்...

கோர்ட்டுக்கும் நிதிபதிகளுக்கும் கூட அறிவுரை சொல்லும் கதை. கடைசி காட்சியில் கோர்ட் சீன்களில் வசனம் ஒவ்வொன்றும் சாட்டையடி. ‘சாட்சிய மட்டுமே வெச்சு தீர்ப்பு சொல்லுற இந்த வழக்கத்தை முதல்ல மாத்துங்க..’ என்று கரண் கெஞ்சிக் கேட்கும் போது அதில் எவ்வளவு பெரிய உண்மை இருக்கிறது என்பது உறைக்கிறது. இது போன்ற வசனங்கள் ஏராளம். ஆனால் அதையை தொடர்ந்து நிமிடக்கணக்கில் பேசிக் கொண்டே போகும் போது வெறுப்பாகிவிடுகிறது. நிரபராதிகள் பாதிக்கப்படுவதை ஆனந்தி கேரக்டர் அழுத்தமாக சொல்கிறது. அந்த பெண் நன்றாகவே நடித்திருக்கிறார். கோர்ட் கூண்டில் அவர் கதறி அழும் காட்சிகள் மனதை உருக்குவதாக இருக்கிறது. சமூகக் கருத்தைத் தாங்கி வந்துள்ள படம் தான்... ஆனாலும்... என்ன பண்றது...