அவர்கள் முதலில் சேர்ந்த பிரிவில் அழகான மாணவிகள் இல்லை என்பதால் வேறு பிரிவுக்கு மாற்றிக் கேட்டு அழகான மாணவிகள் படிக்கும் பிரிவிலேயே சேர்கிறார்கள். சேர்ந்த முதல் நாளே, அங்கு கே.கே. என்னும் மாணவியின் நட்பு அவர்களுக்கு கிடைக்கிறது. வகுப்பிற்குப் போனால், முரட்டுத்தனமான மாணவனாக அறிமுகம் ஆகும் குரு, கொஞ்ச நேரத்திலேயே இவர்களுடன் இணைந்து விடுகிறான். பாலா என்னும் மாணவன், கல்லூரியின் சீனியர் மாணவி கௌரி என இவர்களின் நண்பர் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகமாகிறது.
முதல் வருடம் முடிகிற நேரத்தில் எச்.ஓ.டி.யின் மகள் ஷைனி அந்த கல்லூரியில் சேர்கிறாள். அவளும் இந்த நண்பர்கள் பட்டாளத்துடன் இணைகிறாள். அவள் மேல் கிருஷ்ணாவுக்கு காதல் பிறக்கிறது. அவளிடமும் நண்பர்களிடமும் அவன் தன் காதலை மறைக்கிறான். விடுமுறையை சந்தோஷமாக கழிக்க முடிவெடுக்கும் நண்பர்கள் அனைவரும் பாலாவின் சொந்த ஊருக்கு போகிறார்கள். சில நாட்களை சந்தோஷமாகக் கழிக்கிறார்கள். அப்போது, ஷைனியின் அப்பா, அவளை உடனடியாக கிறிஸ்துமஸ் கொண்டாட, ஊருக்கு புறப்பட்டு வருமாறு அழைக்கிறார். அவள் மட்டும் தனியாக ஊருக்கு புறப்பட முடியாது என்பதால், கிருஷ்ணா அவளை அழைத்துக் கொண்டு புறப்படுகிறான். வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் அவள் அவனைக் காதலிப்பதாகச் சொல்கிறாள். இந்த காதல் விஷயம் அவள் அப்பாவுக்கு தெரிந்துவிட, சும்மா இருப்பாரா அவர்? தாம் தூம் என்று டென்ஷனாகக் குதிக்கிறார்.
தங்கள் காதலை வளர்க்கும் காதலர்கள் காதலை நண்பர்களிடம் மறைந்து விடுகின்றனர். இதனால் கடைசிவரைக்கும் நண்பர்கள் யாருக்குமே இவர்கள் காதல் தெரியாமல் போகிறது. கல்லூரி முடியும் கடைசி நாளில் காதலர்கள் தன் நண்பர்களிடம் தங்கள் காதலைப் பற்றிச் சொல்ல, எல்லோரும் சந்தோஷமாகின்றனர். ஷைனியை கிருஷ்ணாவின் நண்பன் பாலாவும் ஒருதலையாக இவ்வளவு நாளும் காதலித்து வந்ததால் அதைக் கேட்ட அவன் தற்கொலை செய்து கொள்கிறான். இதனால் வேதனைப்படும் நண்பர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள். காதலர்கள் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.
கல்லூரி என்றால் ஜாலியாக இருக்கும் இடம் என்பது சினிமாவுக்குரிய இலக்கணம் என்பதாலோ என்னவோ, வழக்கமாக இருக்கக்கூடிய கலாட்டா, ராகிங் காட்சிகள் எல்லாமே இந்தப் படத்திலும் இருக்கிறது. எல்லோரிடமும் ஜாலியாகப் பழகும் கேரக்டர் கிருஷ்ணாவுக்கு. முதல் பகுதியில் ஏராளமான காட்சியாக ஜாலியாக அதே நேரத்தில் அழுத்தம் இல்லாமல் வந்து போகின்றன. எந்நேரமும் கடுகடுப்பாக இருக்கும் எச்.ஓ.டி.யின் செய்கைகள் சில நேரங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன. கிருஷ்ணாவும் நந்தாவும் அடிக்கும் லூட்டிகள் சில நேரங்களில் மட்டுமே சிரிப்பை வரவழைக்கின்றன. பாலாவுக்கு ஷைனிமீது காதல் ஆழமாக ஏற்படுவதற்காகவும், ஷைனிக்கு கிருஷ்ணா மேல் காதல் வருவதற்கும் அழுத்தமான காரணங்களை சொல்லும் இயக்குநர், கிருஷ்ணாவுக்கு அவள் மேல் காதல் வருவதற்கு என எந்த காரணத்தையும் சொல்லவில்லை. அது சரி... காதல் வர காரணம் வேணுமா என்ன...?
முற்பகுதியில் நண்பர்கள் பேசிக்கொண்டிருப்பதையே அடிக்கடி காட்டிக் கொண்டிருப்பதால் ‘டிவி சிரியலை படத்துக்கு இடையில நுழைச்சிட்டாங்களோ...’ என்று சில நேரம் எண்ணத் தோன்றுகிறது. பாலாவின் ஊருக்கு நண்பர்கள் அனைவரும் சென்று தங்கும் காட்சிகள் சில நிமிட நேரங்களே வந்து சென்றாலும் அந்த கிராமத்து உபசரிப்பு, கிராமத்து வாழ்க்கை எல்லாமே அழகாக இருக்கின்றன. சென்டிமென்டையும் ஆங்காங்கே திணித்திருக்கிறார் இயக்குநர்.. பாடல்கள் எல்லாமே கேட்கிற மாதிரி இருந்தாலும், ‘ஒரு குடைக்குள்..., வெண்ணிலா’ பாடல்கள் மனதிற்குள் நிற்கின்றன. விஜய் ஆம்ஸ்ட்ராங் தெருக்களையும், மலைகளையும் அழகாக காட்டியிருக்கிறார். சில காட்சிகளில் ‘இந்த இடத்தில ஒரு பின்னணி இசை போட்டிருக்கலாமேப்பா...’ என்று நினைக்கத் தோன்றுகிறது.
திரைக்கதையில் இன்னும் வேகம் காட்டியிருந்தால் படம் இன்னும் வேகமாக நகர்ந்திருக்கும். ஆங்காங்கே டல் அடித்தாலும் அழுத்தமான க்ளைமேக்சுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர். |