MailPrint
யோகி
[ Tuesday, 01 December 2009, 06:11.12 AM GMT +05:30 ]
கய்தே, கஸ்மாலம், பேமானியிலிருந்து பவுடர், மர்டர் என்று பிரமோஷன் ஆகியிருக்கும் ஸ்லம் கதை. அதில் ஜம்மென்று அறிமுகமாகியிருக்கிறார் அமீர். வாங்க குப்பத்து ராஜா...

கூவக்கரையோரத்தில் குடியிருப்பதாலேயே அழுக்கும், ஆவேசமுமாக திரிகிறது இந்த இளைஞர் கோஷ்டி. தப்பு செஞ்சாலும் தமுக்கடிக்கிற மாதிரி செய்யணும் என்பது சக நண்பனான சினேகனின் ஆசை. அந்த ஊர் இன்ஸ்பெக்டரிமே ஆட்டைய போடுகிறார்கள். தப்பி ஓடும்போது ஒரு காரை கடத்திக் கொண்டு ஓடுகிறார் அமீர். காருக்குள்ளே... அழகான குழந்தை ஒன்று. அதுதான் அமீரின் சந்தோஷ ஆரம்பம். ஆயுளின் முடிவு.
அது தெரியாமல் குழந்தையை தானே வளர்க்க வேண்டும் என அவர் முனைப்பு காட்டுகிறார். இன்னொரு பக்கம் குழந்தைக்கு அம்மாவான சுவாதி படுத்த படுக்கையாக கிடக்க, அவளது இரண்டாம் கணவரான வின்சென்ட் அசோகன் குழந்தையை கொல்வதற்காக அதே குப்பத்தில் ஆட்களுக்கு பணம் கொடுக்க, ஆரம்பமாகிறது சேசிங். குழந்தை தப்பித்ததா? கடத்திய அமீரின் கதி என்ன? கதையின் வேகத்தில் அங்கங்கே பிரேக் பிடித்தாலும், பிற காட்சிகளில் எக்குதப்பான வேகம்.

"ஒழுங்கா சமத்தா இருக்கணும்..." படம் எடுத்தாடும் பாம்பிடம் நிதானமாக எச்சரித்துவிட்டு போகும் அமீரின் கண்களும், முகமும் பயங்கரம். அதிலும் குளோஸ் அப்பில் வந்து பாம்பை சீண்டிவிடும் தைரியமே சொல்கிறது அவன் எதற்கும் அடங்காதவன் என்று! இறுதிவரை அந்த திமிரை காப்பாற்றியிருக்கிறார் அமீர். வெல்டன் பாஸ¨... 'சீர்மேவும் கூவத்திலே' பாடலில் ஒரு ஆட்டம் போட்டிருக்கிறாரே, பிரமாதம்ப்பா! தன்னை வளைக்கும் ரவுடிகள் மத்தியில் மெல்ல நடந்து ஒவ்வொருவனுக்கும் கீறல் போடுகிறாரே, செம சீன் சாரே!

கவிஞர் சினேகன் பேனாவுக்கு பதிலாக பிஸ்டலை பிடித்திருக்கிறார். தோளில் புரளும் முடியும், துடிக்கும் கண்களுமாக மனிதர் இன்னொரு ஏரியாவில் சதம் அடிக்க கிளம்பி விட்டாராக்கும்! இவருடன் வரும் இன்னும் சில ஸ்லம்டாக் ரவுடிகளும் நடிப்பில் நங்கூரம் போட்டிருக்கிறார்கள்.

தோளில் தொங்கும் குழந்தையுடன் திரியும் மதுமிதா, தமிழ்சினிமா நாயகிகளின் இலக்கணங்களை துவைத்து காய போட்டிருக்கிறார். ஒரு காட்சியில் அவர் காட்டியிருக்கும் துணிச்சல் வேறெந்த நடிகைகளுக்கும் வராது. (அந்த காட்சியில் அமீர் மட்டும் வேறு பக்கம் திரும்பிக் கொள்வாராம். நாமெல்லாம் பார்க்கணுமாம். நல்லாயிருக்குய்யா நியாயம்)

ரசிகர்களுக்கு ஆத்திரத்தை கிளப்பும் அந்த பிளாஷ்பேக்கில் அறிமுகமாகிறார் புதுமுகம் தேவராஜ். தாடியை சொறிந்து கொண்டே அவர் பேசுகிற டயலாக்குகள் ஆத்திரமூட்டுகிறது. 'நான் கடவுள்' தாண்டவனே இவரிடம் 'பிச்சை' வாங்க வேண்டும் போலிருக்கிறது. இவருக்கான முடிவை தியேட்டரே கொண்டாடுகிறது. இவருக்கு தமிழ்சினிமா தாராளமாக ஒரு 'நல்வரவு' சொல்லலாம்.

எல்லாம் ஓ.கேதான். குழந்தையை வளர்க்கிறேன் பேர்வழி என்று அமீர் செய்யும் அட்டகாசங்கள் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. எந்த நேரத்தில் மூச்சடைக்குமோ என்ற ஐயுற வைக்கிறது, அந்த குழந்தை கிடக்கும் பெட்டியை மூடும்போதெல்லாம். இன்னொரு காட்சியில் உடம்பெல்லாம் கட்டெறும்பை கடிக்க விட்டிருக்கிறார்கள். பிராணிகள் வதை சட்டம் மாதிரி, குழந்தைகள் வதை சட்டத்தையும் சினிமாவில் கொண்டுவர வேண்டும். உடனே... உடனே...

கத்திப்பாராவுக்கு தடை போட்ட மாதிரி, கட்டி முடிக்கப்படாத கட்டிடங்களில் க்ளைமாக்ஸ் வைக்கக் கூடாது என்றொரு தடை போட்டால் கூட பரவாயில்லை. யூ டூ அமீர்?

யுவனின் இசையில் இரண்டே பாடல்கள். (பத்தாது நைனா...) மிரட்டலான லைட்டிங்கில் தனது இருப்பை காட்டுகிறார் ஒளிப்பதிவாளர்.
யோகி- கூவக்கரையில் ஒரு தவம்!