Viduppu.com

அவர் பெயர் தமிழரசி
[ Monday, 08 March 2010, 04:21.38 PM GMT +05:30 ]
எட்டு வருடங்களாக தன் காதலியைத் தேடி வரும் ஜோதி திரும்பவும் சொந்த ஊருக்கே வருவதாக ஆரம்பிக்கிறது படம்.
அவன் தன் காதல் வாழ்க்கை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறான்.
 
ஜோதியின் பள்ளி பருவத்தில் அந்த ஊருக்கு தோல்பாவைக் கூத்து நடத்த வருகிறார்கள் ஒரு குழுவினர். அதை நடத்திவரும் பெரியவரின் பேத்திதான் தமிழரசி. சின்ன வயதிற்கே உரிய குறும்பை அவளிடம் ஜோதி காட்ட, அதுவே அவர்கள் இருவரது நட்புக்கும் அடித்தளமிடுகிறது. தமிழரசியை ஜோதிக்கு நன்றாகவே பிடித்துப் போய்விடுகிறது. பத்து நாட்களில் தோல்பாவைக் கூத்து முடிந்து விடும், அதன் பிறகு தமிழரசி தன்னை விட்டுப் பிரிந்து போய்விடுவாள் என்று நினைக்கும் ஜோதி, தனது தாத்தாவிடம் போய் தமிழரசி குடும்பத்தினரை அந்த ஊரிலேயே தங்க வைக்கும்படி கட்டாயப்படுத்துகிறான். அவனது விருப்பத்திற்காக வேறு வழியின்றி தோல்பாவைக்கூத்து குழுவினர் அந்த ஊரில் இருப்பதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து தருகிறார் அவனது தாத்தா.
 
அந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு அவர்கள் தோல்பாவைக்கூத்து நடத்தப் போனால் அவர்கள் வரும் நாட்களில் அவர்களைப் பார்க்க ஜோதி தவியாய் தவித்துக் காத்துக் கிடக்கிறான். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு வருகிறது, அதில் ஜோதி பெயிலாகி விட தமிழரசியோ மாவட்ட அளவில் முதல் மாணவியாக வருகிறாள். அதற்குப் பிறகு மேலே படிக்க வேண்டும் என்று ஆசைப்படும் தமிழரசி கவுன்சிலுக்கும் போய்வருகிறாள். புனேயில் உள்ள கல்லூரியில் படிக்க சீட் கிடைக்கிறது.
 
இதை ஜோதியிடம் தமிழரசி சந்தோஷமாக சொல்ல அவனோ, ‘எங்கே தமிழரசி தன்னைவிட்டுப் போய்விடுவாளோ...’ என்ற எண்ணத்தில் கண்ணாமூச்சு விளையாடும் போது அவளை தனியறையில் வைத்து கெடுத்துவிடுகிறான். அதன் பின்னர்தான் தாம் எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம் செய்துவிட்டோம் என்று அவனுக்கு புரிகிறது. தமிழரசியைப் பார்த்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவளைத் தேடி அதிகாலையிலே அவள் வீட்டுக்குப் போகிறான். அங்கே வீடு பூட்டிக் கிடக்கிறது. அவள் வரும் நாளுக்காக காத்திருக்கிறான். சில நாட்கள் கழித்து அவள் வீட்டிற்கு வந்திருப்பதாக செய்தி கேட்டு அவளைப் பார்க்க போகிறான். தூரமாக நின்றுப் பார்த்தவனுக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி.
 
தமிழரசியின் அம்மாவோ அவளைத் திட்டிக் கொண்டே அடிக்கிறாள். ‘யாருடி இதுக்கு காரணம்...’ என்று திரும்ப திரும்பக் கேட்டு உதைக்கிறாள் அவளை. அவளோ எதுவும் சொல்ல மறுக்கிறாள். மேலும் ஆத்திரமான அவள் அம்மா, அவளது புத்தகங்கள், துணிகள், சர்டிபிகேட் எல்லாவற்றையும் தீயிட்டு கொழுத்திவிடுகிறாள். இதையெல்லாம் பார்த்துத் தாங்கிக் கொள்ளாதவனாக அங்கிருந்து கண்களில் கண்ணீருடன் போய்விடுகிறான் ஜோதி.
 
தமிழரசியின் அம்மா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். அதன் பிறகு அந்தக் குடும்பம் சின்னா பின்னமாகச் சிதறிப் போகிறது. அவள் தம்பி, இன்னொரு பாவைக்கூத்து குழுவில் போய் சேர்கிறான். தாத்தா யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் எங்கே போனார் என்றே தெரியாமல் போகிறது. தமிழரசியை அவளது உறவினர் குடும்பம் மஹாராஷ்ட்ராவுக்கு அழைத்துச் செல்கிறது.
 
அன்றிலிருந்து தமிழரசியைத் தேடிக் கொண்டிருந்த ஜோதி இன்று இப்பொழுது வரை தேடிக் கொண்டிருக்கிறான். இன்னும் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது சொந்த ஊருக்கே வந்துவிட்டான். அங்கு தனது நண்பன் உதவியுடன் தமிழரசியைத் தேடுகிறான். புனேயில் அவள் இருப்பது தெரியவர, புனே நோக்கிப் பயணிக்கிறான். சில பல தேடல்களுக்குப் பின் ஒரு நாள் தமிழரசியின் உறவுப் பெண்ணைச் சந்திக்கிறான் ஜோதி. தமிழரசியை அவள் உறவினர்கள் நடனத்திலும், விபச்சாரத்திலும் ஈடுபடுத்தியிருப்பதாக அவள் சொல்கிறாள். தமிழரசி இருக்கும் இடம் போய் பாக்கிறான். அவளோ, தன் மனதில் அவன் இல்லை என்கிறாள். அதன்பிறகு ஜோதி தமிழரசி இணைந்தார்களா... இல்லையா என்பது க்ளைமாக்ஸ்..
 
ஜோதியின் சிறுவயதுக் காட்சிகளில் சிறுவர்களுக்கே உரிய குறும்புக் காமெடியுடன் படம் நகர்கிறது. அவர்கள் அடிக்கும் காமெடியில் தியேட்டரே அதிர்கிறது. தெளிந்த நீரோடை போன்று ஆரம்பிக்கும் கதை பின்னர், பல திருப்பங்களைத் தாண்டிப் பயணிக்கிறது. ஒவ்வொரு காட்சியும் அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்பதை எதிர்பார்க்க வைக்கிறது. தமிழரசிதான் நம் நெஞ்சத்தை வெகுவாக அள்ளிப் போகிறாள். ஜோதியாக ஜெய்.
 
தமிழரசி (நந்தகி) நடிப்புக்கு கை தட்டலாம். ஒவ்வொரு காட்சியிலும் புதிதாய் மிளிர்கிறார். நல்ல நடிப்பு. ஓவியர் வீர சந்தானம், தமிழரசியின் அம்மா, தம்பி அத்தனை கதாபாத்திரங்களும் தமது கேரக்டரை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
 
தோல்பாவைக் கூத்து முற்றிலும் அழிந்து போன நிலையிலும் அதைக் கெட்டியாக பிடித்திருக்கும் தமிழரசியின் தாத்தா, இதனாலேயே பிரிந்து போகும் தமிழரசியின் மாமா, பக்கத்து ஊரில் சர்க்கஸ் போடுவதால் பாவைக்கூத்து பார்க்க வருபவர்களும் வராமல் போகிறார்கள், பாவைக்கூத்து போடுபவர்களின் ஏழ்மை நிலை, சாப்பிட்டும் சாப்பிடாமலும் கழியும் அவர்களது வாழ்க்கை என அத்தனையையும் காட்டத் தவறவில்லை இயக்குநர்.
 
காமெடிக்கு கஞ்சா கருப்பு இருந்தாலும், ஜெய்யின் நண்பர்களாக வருபவர்கள் எல்லோருமே கமெடியில் கலகலக்க வைக்கிறார்கள். சடங்கு வீட்டில் படம் பார்க்கும் போது, பலானா கேசட்டை ஓட விட அதைப் பார்த்து பெண்கள் எழுந்து ஓடுவது, அதனால் மிலிட்டரிகாரர் ஜோதி நண்பர்களைத் துரத்துவது, கஞ்சா கருப்பு குடும்பக் கட்டுப்பாடு பண்ணப் போவது என வயிற்றைப் பதம் பார்க்கும் காமெடிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். மழை பெய்யும் போது, ‘ஒவ்வொரு துளியும் சோத்துப் பருக்கை’ என்பது போன்ற நயமிக்க வசனங்கள் ஆங்காங்கே தெறிக்கின்றன.
 
தமிழரசியைத் தேடி ஜோதி மஹாராஷ்ட்ரா போவது மட்டும் சட்டென கற்றது தமிழ் படத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. ஆனாலும் அடுத்தடுத்த காட்சிகள் வந்து அழுத்தி அதை மறக்கச் செய்கின்றன. விஜய் ஆன்டனியின் பாடல்கள் எல்லாமே தாளம் போட வைக்கின்றன. சில இடங்களில் அழுத்தமான இசை மிஸ்ஸிங். ஒளிப்பதிவு முத்தையா. அந்தக் கிராமத்தையும் பொட்டல் காடுகளையும் அழகாக ப்ரேமுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.
 
இன்று முற்றிலும் அழிந்து போன தோல்பாவைக்கூத்தை வைத்து கதை சொல்லியிருப்பதற்காக மீரா கதிரவனுக்கு ஒரு சபாஷ் போடலாம். அழுத்தமான கதை காட்சிகளுடன் களம் இறங்கியிருக்கும் மீரா கதிரவன் முதல் படமே சிறந்தப் படமாக கொடுத்திருக்கிறார்.
 
அவள் பெயர் தமிழரசி - மனதைப் பறித்துக் கொள்கிறாள்...!

Copyright 2005-07 Viduppu.com, All rights reserved.