கடத்தல் வழக்கில் சிக்கிய அஜீத் பட நடிகர்!!

Report
33Shares

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகரில் வசிப்பவர் செந்தில் குமார் (வயது 42). தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர். இவர், கடந்த மாதம் 19-ந் தேதி காலை நடைபயிற்சி சென்றபோது, காரில் வந்த மர்ம கும்பல் ரூ.3 கோடி கேட்டு கடத்தியது.

இதையடுத்து, நடந்த பேரத்தில் தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை அருகே கடத்தல் கும்பலிடம் ரூ.50 லட்சம் கொடுத்து செந்தில்குமாரை அவரது அண்ணன் உதயச்சந்திரன் மீட்டார்.

கடத்தல் கும்பல் முகத்தில் பனிகுல்லா போட்டு இருந்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால், போலீசாரிடம் சிக்காமல் ரூ.50 லட்சத்துடன் கடத்தல் கும்பல் காரில் தப்பிச் சென்றுவிட்டது.

கடத்தல் கும்பல் பணம் பெற்றுக் கொண்டு செந்தில் குமாரை விடுவித்து காரில் தப்பிச் செல்லும் காட்சிகள் செல்போனில் ரகசியமாக எடுக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து, வேலூர் எஸ்.பி. பகலவன் உத்தரவின் பேரில், கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், தாளாளர் செந்தில்குமார் நடத்தி வரும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த வாணியம்பாடியை பகுதியை சேர்ந்த பிரியா என்பவரின் கணவரும், சினிமா நடிகருமான ஹரி என்கிற ஹரிஹரனுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.

நடிகர் ஹரி, அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம், முனியாண்டி, விலங்கியல் 3-ம் ஆண்டு உள்ளிட்ட பல்வேறு சினிமா படங்களில் நடத்துள்ளார். என்னை அறிந்தால் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிகர் அஜித்துடன் சேர்ந்து கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து பிடிக்கும் வேடத்தில் ஹரி நடித்துள்ளார்.

பல படங்களில் வில்லன்களுடன் வரும் அடியாள் வேடத்திலும் நடித்துள்ளார். நடிகர் ஹரி தலைமறைவாக இருந்ததால், அவரது மனைவியான ஆசிரியை பிரியாவை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் தாளாளர் கடத்தலில் திடுக்கிடும் தகவல் வெளியாகின.

செந்தில்குமாரின் பள்ளியில் ஆசிரியை பிரியா, கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். அந்த பள்ளியில் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. பிரியா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், சினிமா நடிகர் ஹரியுடன் ஏற்பட்ட பழக்கத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரை பிரியா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, வில்லன் நடிகர் ஹரி சென்னையிலேயே தங்கி சினிமா படங்களில் நடித்து வந்தார்.

ஆசிரியை, வாணியம்பாடியில் தங்கி இருந்தார். இந்த நிலையில், மாணவ, மாணவிகளிடம் கண்டிப்புடன் நடந்துக் கொண்ட புகாரில், ஆசிரியை பிரியாவை பள்ளி நிர்வாகம் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்டு செய்ய முடிவு செய்தது.

இதையறிந்த ஆசிரியை, அவராகவே ராஜினாமா செய்து விட்டு வேறு பள்ளியில் வேலைக்கு சென்று விட்டார். முன்பு பணி புரிந்த பள்ளி நிர்வாகத்தால் மன அழுத்தத்தில் இருப்பதாக நடிகர் ஹரியிடம் கூறிய ஆசிரியை பிரியா பழி வாங்க வேண்டுமென கூறியுள்ளார்.

தாளாளர் செந்தில்குமாரிடம், கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக ஆசிரியை கூறி உள்ளார். இதனையடுத்து அவரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்ட நடிகர் ஹரி, சென்னையில் உள்ள தனக்கு நெருக்கமான கூலிப்படை கும்பலை வாணியம்பாடிக்கு வரவழைத்தார்.

தாளாளர் செந்தில்குமாரை பின்தொடர்ந்து கடத்திய கூலிப்படை, பணம் பறித்து கொண்டு விடுவித்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, ஆசிரியை பிரியா கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார், கூலிப்படை கும்பலை சேர்ந்த சென்னை கொடுங்கையூர் முத்து (27), மற்றும் இப்ராஹிம்(32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் மூளையாக செயல்பட்ட நடிகர் ஹரி உள்ளிட்ட மேலும் சிலரை பிடிக்க தனிப்படை தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது.

போலீஸ் நெருங்கியதை அறிந்த, நடிகர் ஹரி தன்னுடன் முனியாண்டி, விலங்கியல் 3-ம் ஆண்டு உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்த கோவையை சேர்ந்த வெல்டிங் கடை உரிமையாளருக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்பு போன் செய்துள்ளார்.

பிறகு, கோவைக்கு சென்று வெல்டிங் கடை உரிமையாளர் உதவியுடன் பதுங்கியிருந்தார். 7 நாட்கள் அங்கு இருந்த நடிகர் ஹரி, வெல்டிங் கடை உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை ரூ.35 ஆயிரத்தை கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

இத்தகவலையறிந்த தனிப்படை போலீசார், கோவைக்கு சென்று வெல்டிங் கடை உரிமையாளரையும் பிடித்து வந்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நடிகர் ஹரி நேற்று மாலை சரணடைந்தார். போலீஸ் காவலில் எடுத்து ஹரியை விசாரித்தால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

இதனால், நடிகர் ஹரியை காவலில் எடுக்க போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். சினிமா படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து நிஜத்தில் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக மாறிய சினிமா நடிகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1489 total views