ஆர்.கே. நகரில் பல பாடம் கற்றுக்கொள்வாரா விஷால்

Report
61Shares

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் விஷால் தனது வேட்புமனுவை ஏற்றுக்கொள்ள வைக்கவே தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது. தமிழக அரசியலில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, டி.ராஜேந்தர், பாக்யராஜ், ராமராஜன், சரத்குமார்,விஜயகாந்த், சீமான் என பலரும் நடிகராக இருந்து அரசியலில் அடியெடுத்து வைத்தவர்களே.

இவர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா மட்டுமே முதல்வர் நாற்காலியை அலங்கரித்தவர்கள். எதிர்கட்சி தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த். மற்றபடி பாக்யராஜ், ராமராஜன், டி.ராஜேந்தர், சரத்குமார், சீமான் எல்லாம் இன்னமும் அரசியல் பாடம் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். முதல்வர் கனவில் நடிகர்கள் ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை இல்லாத நிலையில் ரஜினி, கமல், விஜய், விஷால் என பல நடிகர்கள் அரசியலுக்கு வர ஆசைப்படுகின்றனர்.

இதில் பலருக்கும் முதல்வர் நாற்காலி கனவு இருக்கிறது. சுயேச்சையாக விஷால் பெரிய நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வர நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம் பார்த்துக்கொண்டிருக்கையில் விஷால் நேரடியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கிவிட்டார்.

தனக்கு பின்னால் யாரும் இல்லை என்று கூறினாலும், ஆழ்வார்பேட்டை ஆண்டவரும், அரவிந்த் கெஜ்ரிவாலும் இருக்கின்றனர் என்பதை அனைவரும் அறிவார்கள். காக்க வைக்கப்பட்ட விஷால் டிசம்பர் 4ல் விஷால் வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்று தெரிந்த உடனே அரசியல் கட்சியினர் தங்களின் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர். ஆதரவாளர்கள் பலரையும் சுயேட்சையாக களமிறக்கினர். விஷால் வரிசையில்தான் வரவேண்டும் என்று தகராறு செய்ய வைத்தனர்.

68வது டோக்கன் பெற்ற விஷால், சில மணிநேரங்கள் காத்திருந்தே வேட்புமனு தாக்கல் செய்தார். சேரன் மூலம் நெருக்கடி விஷால் வேட்புமனு தாக்கல்செய்த அதேவேளையில், தேர்தலில் விஷால் போட்டியிடுவது, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் நலனைப் பாதிக்கும் என்றுகூறி, இயக்குநர் சேரன் தலைமையில் பல தயாரிப்பாளர்கள், புரொட்யூசர் கவுன்சிலில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினார்.

அத்தனை எளிதில் விடுவார்களா? திமுகவில் எம்ஜிஆர் என்ற ஆளுமையை வெளியேற்றினர். அவருக்குப் பின்னர் எந்த ஒரு நடிகரும் திமுகவில் ஜொலிக்க முடியவில்லை. பல நடிகர்கள் டம்பியாகவே, கவர்ச்சி பேச்சாளராகவே இருந்து வெளியேறினர். டி.ராஜேந்தர், சரத்குமாரும் விதிவிலக்கல்ல.

நேற்று வந்த விஷாலை அரசியலுக்குள் அடியெடுத்து வைக்க விடுவார்களா என்ன? அரசியல் கற்றுக்கொள்வாரா விஷால் 1989ல் சட்டசபையில் ஜெயலலிதா திமுகவினர் மூலம் அரசியல் பால பாடத்தை கற்றுக்கொண்டார். 2011ல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் அதிமுகவினர் மூலம் பாடம் கற்றுக்கொண்டார்.

ஆர்.கே.நகரில் விஷாலின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்று அதிமுக, திமுக, சுயேட்சை வேட்பாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனு மீதான பரிசிலனையே நிறுத்தப்பட்டது. ஆர்.கே.நகரில் களமிறங்கியதன் மூலம் விஷால் அரசியல் பாடம் கற்றுக்கொள்வாரா? தயாரிப்பாளர் சங்கமல்ல விஷால் போட்டியிட்டு எளிதில் ஜெயிக்க இது நடிகர் சங்கமோ, தயாரிப்பாளர் சங்கமோ அல்ல.

அரசியல் என்ற கடலில் கஷ்டப்பட்டுதான் அவர் நீந்தி கரை சேர வேண்டும். காரணம் அவருக்கு சினிமாவில் நண்பர்களாக இருந்த கருணாஸ், ஜே.கே.ரித்தீஷ் போன்றவர்களே எதிரணியில் இருக்கிறார்கள். என்ன செய்யப்போகிறார் விஷால் பொறுத்திருந்து பார்க்கலாம்.

2671 total views