எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே

Report
203Shares

நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த ஜெகன், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகும் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’ படத்தில் போலீசாக நடிக்கிறார்.

பல படங்களில் சிறிய வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்த ஜெகன், தற்போது புதிய படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

ராஜாமணி தியாகராஜன் முத்து விநாயகா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் காரைக்குடி நாராயணன் கதை வசனத்தில் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’ என்ற நகைச்சுவை கலந்த படத்தில் ஜெகன் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக மோனிகா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ள பல முக்கியமான பகுதிகளிலும், மற்றும் சென்னை தாம்பரம், கொளத்தூர் போன்ற இடங்களிலும் நடந்து வருகின்றது.

ஜெகன் - மோனிகாவுடன், கவிஞர் பிறைசூடன், சேரன் ராஜ், சாம்ஸ், விவேக் ராஜ், ரவி, நிகிதா, டிஸோசா, கொட்டாச்சி, வின்னர் ராமச்சந்திரன், அம்பானி சங்கர், இவர்களுடன் லட்சுமி என்ற பசுமாடு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடத்தில் நடிக்கிறது. முருகலிங்கம் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ஜெகன் பயந்த சுபாவம் கொண்ட போலீசாக நடிக்கிறார். கதைப்படி கந்து வட்டி கருணாகரன் (பிறைசூடன்) மகள் கமலியை (டிஸோசா) பத்திரிகையாளன் அருண்குமார் (விவேக்ராஜ்) காதலிக்கிறான். இதையறிந்த கருணாகரன் தனது அடியாட்களை அனுப்பி கொலை செய்ய முயற்சிக்கிறான்.

காதல் ஜோடி தப்பி ஓடி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைகிறது. அவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (சேரன் ராஜ்) ஆதரவு தராத நிலையில், அங்கு வேலை பார்க்கும் பயந்த சுபாவம் கொண்ட போலீஸ் மாதவன் (ஜெகன்), ஏட்டு புகழேந்தியும் (ரவி), அவன் மனைவி சிவசங்கரியும் (நிகிதா) அவர்களுக்கு பதிவு திருமணம் செய்து போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பிலேயே முதலிரவை கொண்டாட வைக்கிறார்கள். இதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்று விடுமுறை என்ற போர்டையும் எழுதி தொங்க விடுகிறார்கள்.

மேலும் கைதிகளுடன் ஜெகன் சிக்கிக் கொள்ளும் காமெடி காட்சிகளுடன் இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

9466 total views