மீண்டும் சர்ச்சையில் தமிழ் பாடகி சின்மயி..! ரஹ்மானுக்கு என்ன பங்கு..?

Report
402Shares

ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சையில் ரஹ்மானுக்கு ஆதரவாகப் பாடகி சின்மயி பதிவுகள் எழுதியுள்ளார். தனது 25 வருட திரைப்பயணத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான். நேற்று இன்று நாளை என்கிற இந்த இசை சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சி ஜுலை 8 அன்று லண்டனில் நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சியில் பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் பங்கேற்றார்கள். இந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சி தற்போது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டதாகப் புகார்கள் வந்துள்ளன. சமூகவலைத்தளங்களில் பல்வேறு புகார்கள் இதுகுறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் சமூகவலைத்தளத்தில் மீண்டுமொரு தமிழ் - ஹிந்தி விவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் சிலர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி இந்நிகழ்ச்சியில் 16 ஹிந்திப் பாடல்களும் 12 தமிழ்ப் பாடல்களும் பாடப்பட்டுள்ளன. ஆனாலும் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டதாக லண்டனில் வாழும் வட இந்தியர்கள் சமூகவலைத்தளங்களில் பல்வேறு புகார்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் ரஹ்மானுக்கு ஆதரவாக பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஏ.ஆர். ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் வாங்கியபோது இந்தியன் என்று பெருமை கொண்டோம். ஆனால் ஏழு எட்டு தமிழ்ப் பாடல்கள் பாடினால் ஏன் வருத்தப்படவேண்டும்?

அந்த நிகழ்ச்சி நேற்று இன்று நாளை என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் 65% ஹிந்திப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இசைக்கு எல்லைகளும் மொழியும் கிடையாது. அமெரிக்க வாழ்க்கையைக் கனவு காணுங்கள், உங்கள் குழந்தைகள் ஸ்பானிஷ் கற்றுக்கொள்ளலாம், இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தில் வசிக்கலாம்.

ஆனால் தமிழ்ப் பாடல்கள் பாடப்படும்போது மட்டும் ஏன் புகார் கூறுகிறீர்கள் என்று தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரஹ்மானிடமிருந்து இந்த சர்ச்சை குறித்து இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் இந்நிகழ்ச்சி குறித்த விவாதம் சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

13552 total views