வெளிநாட்டினர் காதலும்.. வித்தியாசமான அனுபவங்களும்..

Report
876Shares

இந்தியர்கள், வெளிநாட்டினரை திருமணம் செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. அப்படி நாடு தாண்டி வாழ்க்கையில் இணைபவர்களின் வாழ்க்கை எதிர்பார்த்ததுபோல் சுவாரசியமாக இருக்கிறதா?

சில தம்பதிகளின் கருத்துக்களை கேட்போம்.

அம்ருதா கருணாகரன்–போர்ட்டி (இந்தியா–நெதர்லாந்து):

கண்டம் விட்டு கண்டம் தாண்டி காதலனை கரம் பிடித்த கதையை அம்ருதா சொல்கிறார்:

‘‘போர்ட்டியுடனான எனது அறிமுகம் நான் கல்லூரியில் படித்தபோது வலைத்தளத்தின் வழியாக நடந்தது. அவர் நல்ல நண்பர். வெளிநாட்டவருடன் பேசலாம், பழகலாம், ஆனால் அவரையே திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்துவது என்பது சற்று சிக்கலான வி‌ஷயம் என்றே நினைத்திருந்தேன். வெளிநாட்டவர் கலாசாரம், பழக்க வழக்கங்கள் இதையெல்லாம் புரிந்து கொள்ளவே நாளாகும் என்பது என் கருத்தாக இருந்தது. அதனால் போர்ட்டியுடன் பழகும்போது திருமணம் பற்றிய எண்ணம் எழவேயில்லை.

அவர் விடுமுறையில் இந்தியா வந்து என்னை சந்தித்தார். அவருடன் நெருங்கி பழகிய போது வெளிநாட்டவர் பற்றிய என்னுடைய எண்ணத்தில் மாறுதல் ஏற்பட்டது. அவரை நன்கு புரிந்து கொண்டேன். அவரையே திருமணம் செய்து கொண்டால் என்ன தவறு என்று தோன்றியது. மொழியைப் பொறுத்தவரை எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இருவருக்கும் ஆங்கிலம் தெரியும். நாங்கள் எட்டு ஆண்டுகளாக காதலித்தோம். அவருடைய பி.எச்டி படிப்பு முடியும் வரை காத்திருந்தேன். பிறகு இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பின் நான் நெதர்லாந்து சென்றேன். அங்கு வாழ வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டதும் ‘டச்சு’ மொழி கற்றுக் கொண்டேன்.

எங்கள் இருவரின் எண்ணமும் ஒரே மாதிரியாகவே இருந்தது. அதனால் கலாசார மாற்றம் பற்றி எனக்கு எந்த அசவுகரியமும் தோன்ற வில்லை. ஆனால் மும்பையின் கூட்ட நெரிசல், வெயிலின் உஷ்ணம், நகர வாழ்வின் நெருக்கடி இதெல்லாம் அவருக்கு பழக்கப்படவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனாலும் எனக்காக சில அசவுகரியங்களை பொறுத்துக் கொண்டார். ஆறுமாதத்திற்கு ஒருமுறை இந்தியா வந்து என் குடும்பத்தாருடன் தங்கி இருப்பார். அவர்களும் என்னை ஏற்றுக்கொண்டால் தான் உன் வாழ்க்கை நலமாக இருக்கும் என்று அடிக்கடி கூறுவார். நெதர்லாந்துக்கு சென்றாலும் நான் இந்தியப் பெண்ணாகவே வாழ்ந்து வருகிறேன். அந்த நாட்டு வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் அதற்கு தக்கபடி நான் பழகிக் கொண்டேன். என் கணவர் சமையல் உட்பட எல்லா வேலையிலும் எனக்கு உதவியாக இருக்கிறார்.

நெதர்லாந்து சென்றதும் நான் சுதந்திர பறவை போல உணர்ந்தேன். நான் பயந்தது போல எதுவுமில்லை. அதைவிட முக்கியம் என் குடும்ப வாழ்க்கையில் நான் சுதந்திரமாக செயல்படுகிறேன். எந்த உறவுகளின் தலையீடும் இல்லை. என் மாமியார் எல்லாவிதத்திலும் எனக்கு உதவியாக, அனுசரணையாக இருக்கிறார். இன்றுவரை எங்கள் குடும்ப வி‌ஷயத்தில் அவர் தலையிட்டதே இல்லை. நான் மிகவும் பாக்கியசாலி என்றே நினைக்கிறேன்’’ என்று மனம் நெகிழ்கிறார்.

ஏஞ்சலீனா– நிக்கோலஸ் (இந்தியா–அமெரிக்கா)

‘‘எங்கள் காதல் கதை மிகவும் சுவாரசியமானது. இப்படி ஒரு வெளிநாட்டு நபரை திருமணம் செய்து கொள்வேன் என்று நான் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. எங்கள் வாழ்க்கை சினிமா கதைபோல இருக்கிறது. நிக்கோலஸ் என்னை காதலித்தது, ஏழு கடல் தாண்டி எனக்காக இந்தியா வந்தது எல்லாமே எனக்கு கனவு போல இருக்கிறது’’ என்கிற ஏஞ்சலீனா பரதம் கற்றவர். பரதம்தான் காதலருடன் அவரை கைகோர்க்க வைத்திருக்கிறது.

‘‘நான் குஜராத்தி பெண். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இருக்கும் என் உறவினரை பார்க்கச் சென்றேன். கலிபோர்னியாவில் உள்ள தேவாலயத்தில் என் அத்தை உறுப்பினராக இருந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் என்னை நாட்டியம் ஆடச்சொன்னார். நான் ஒரு இந்தி பாடலுக்கு நாட்டியம் ஆடினேன். அனைவரும் என்னை பாராட்டினார்கள். அந்தக்கூட்டத்தில் நிக்கோலசும் இருந்திருக்கிறார்.

அந்த நிகழ்ச்சி நடந்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகு எனக்கு நிக்கோலசிடமிருந்து மெசேஜ் வந்தது. எனக்கு அவர் யார் என்றே தெரியவில்லை. நாட்டிய நிகழ்ச்சியில் எடுத்த சில புகைப்படங்களை அனுப்பி வைத்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வாஷிங்டனில் வசிக்கும் அவர் கலிபோர்னியாவுக்கு சென்று நாட்டிய நிகழ்ச்சி நடந்த தேவாலயத்தில் என் அத்தையை சந்தித்திருக்கிறார். அவரிடம் ‘நாட்டியம் வி‌ஷயமாக பேச வேண்டும்’ என்று கூறி என் நம்பரை வாங்கி புகைப்படங்களை அனுப்பி இருக்கிறார். அன்று முதல் எங்களுடைய பேச்சு தொடர்ந்தது.

‘உன்னுடைய நாட்டியம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அதை ஒரு நிகழ்ச்சி என்று தான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். பிறகு தான் அது என் வாழ்க்கையின் திருப்புமுனை என்று தெரிந்தது. என்னால் உன்னை மறக்க முடியவில்லை’’ என்றார்.

ஓராண்டு காலம் நிக்கோலசும் நானும் தொலைபேசியில் பேசிக் கொண்டோம். எனக்கு அவருடன் பேசுவதற்கு மொழி பிரச்சினையாக இருந்தது. நம் நாட்டு ஆங்கிலம் வேறு. அவர் பேசும் ஆங்கிலம் வேறு. அதனால் எனக்கு புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. அவர் ஆங்கில வார்த்தைகளுக்கு இந்தி அர்த்தத்தை கண்டுபிடித்து எனக்கு சொன்னார். அவரும் இந்தியை கற்றுக் கொண்டு பேச முயற்சித்தார்.

நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்ததும் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தேன். என் அம்மா அதிர்ச்சி அடைந்து விட்டார். ‘வெளிநாட்டு மாப்பிள்ளையை நம்ப முடியாது. அவர்கள் கலாசாரம் நமக்கு ஒத்துவராது’ என்று கூறி மறுத்தார். என் போராட்டம் வலுத்தது. பிறகு நிக்கோலஸ் ‘நானே நேரில் வந்து உன் வீட்டாரிடம் பேசிக் கொள்கிறேன்’ என்று இந்தியா வந்தார். எல்லோருக்கும் கைகொடுக்கும் பழக்கமுள்ள அவர் என் பெற்றோர் காலில் விழுந்தார். அதை பார்த்து அவர்கள் நெகிழ்ந்து போனார்கள். எனினும் அவரிடம் வெளிநாட்டு திருமணங்கள் பற்றிய தங்கள் பயத்தை வெளிப்படுத்தினார்கள்.

‘அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. இந்திய கலாசாரத்தை மதித்து நடந்து கொள்வேன். உங்கள் மகளை என்றுமே கைவிட மாட்டேன். உங்கள் மகளை பார்த்தவுடன் இவள் தான் என் மனைவி என்று உறுதி செய்துவிட்டேன். அதிலிருந்து நான் என்றும் மாற மாட்டேன்’ என்று வாக்களித்தார்.

அமெரிக்காவில் இருந்து அவருடைய அம்மா பேசினார். ‘எங்களுக்கு அவன் ஒரே மகன். அவனுடைய ஆசையை நிறைவேற்றி வைப்பதில் தான் எங்களுடைய மகிழ்ச்சி அடங்கி உள்ளது. நீங்கள் எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம். இந்த திருமணத்தை நாங்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறோம். என் மகன் உங்கள் மகளுக்காக ஏழு கடல் தாண்டி வந்திருக்கிறான். அவன் அன்பை சந்தேகப்படாதீர்கள் என்றார். அதன் பின்பு எங்கள் திருமணம் நடந்தது”

கிறிஸ்டல்–நரேந்திரன் (அமெரிக்கா–இந்தியா):

கிறிஸ்டல் அமெரிக்க பெண். இந்தியரான நரேந்திரனை திருமணம் செய்து கொண்ட அவர் தங்களுடைய போராட்ட காதல் கதையை பகிர்ந்துகொள்கிறார்.

‘‘எனக்கு உலகம் சுற்றுவது பிடிக்கும். அந்த வகையில் இந்தியா வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். 2010–ல் நரேந்திரன் முகநூல் வழியே பழக்கமானார். அவர் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர். நாங்கள் முதலில் நட்பாக பேசினோம். பிறகு காதலர்களாக மாறினோம். 2014–ல் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. ஜான்சியில் சந்தித்து பேசினோம்.

முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் பிடித்து விட்டது. ஆனால் நரேந்திரன் குடும்பத்தினர் என்னை ஏற்க மறுத்தனர். அவர்களுக்கு வெளிநாட்டு பெண்கள் மீது நல்ல அபிப்பிராயம் இல்லாமல் இருந்தது. ‘இவள் நம்ம கலாசாரத்துக்கு ஒத்துவர மாட்டாள்’ என்றார்கள். என்னையும், முகநூலையும் திட்டித் தீர்த்தார்கள். அவர்களை சமாதானப்படுத்த நான் மூன்று முறை இந்தியா வந்தேன். கடும் போராட்டத்திற்கு பின்பு 2015–ல் இந்து பாரம்பரிய முறைப்படி எங்கள் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு எனக்கு வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இந்திய கலாசாரம் சில அசவுகரியங்களை ஏற்படுத்தியது. அதன் தாக்கமாக பல பிரச்சினைகள் வெடித்தது. நான் விரும்பி திருமணம் செய்துகொண்டதால் எதையும் சிரமமாக நினைக்கவில்லை. இந்திய கலாசாரத்தில் என்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன். நடை, உடை, பாவனை அனைத்தையும் மாற்றிக் கொண்டேன். இந்தி மொழியையும் கற்றுக் கொண்டு வருகிறேன். இந்திய உணவு வகைகளை சமைக்க கற்றுக்கொண்டேன். எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார்.

27681 total views